குறளோவியம்

1,200.00

நீரோடைத் தமிழிலும், நெஞ்சில் கனலேற்றும் முழவோசைத் தமிழிலும், நீள் விழியில் நதி தோன்றத் தூண்டும் உருக்கமிகு உணர்ச்சித் தமிழிலும் குறட்பாக்களை உங்கள் முன்னால் உலவவிட்டிருக்கிறேன்’’ என்று குறளோவியத்துக்குக் குறிப்பு வழங்கினார் கருணாநிதி.
குறள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் அல்லது மார்க்கத்தின் வழி காட்டும் நூலாக இல்லாமல், பொதுவான வாழ்க்கை நெறி வகுக்கும் நூலாகத் திகழ்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு உருவாகியிருந்த தமிழ் நிலத்துச் சமுதாயச் சூழலின் நடுவிலே எழுத்தாணி பிடித்து ஏடெழுதிய வள்ளுவப் பெருந்தகையார், அறம் எதுவென அறுதியிட்டுக் கூறினார். இல்வாழ்க்கையின் இனிய பயனையும் எப்படியிருந்தால் துறவறம் சிறப்புடையது என்பதையும் வாழ்க்கையில் கொள்ளுவன – தள்ளுவன எவை எவை எனப் பகுத்துக்காட்டியும் முடியரசு ஆட்சி நடத்த காலத்திற்குச் சொல்லப்பட்ட அறிவுரைகள் குடியரசு ஆட்சி நடக்கும் நாடுகளுக்கும் பொருந்துமெனக் கூறுமளவுக்கு அரசியல் கோட்பாடுகளை வகுத்தளித்தும் உயிர் இனத்தின் இயற்கை உணர்வான காம உணர்வு, ஆறாவது அறிவையும் பெற்றுள்ள மனித இனத்தினையும் ஆட்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது எனினும் அதற்கு அன்பினை அடிப்படையாகக் கொண்ட இலக்கண இலக்கியக் கவசம் அணிவித்தும் எப்பாலினும் சிறந்த முப்பாலினைப் பொழிந்து அதில் தேன் தமிழும் கலந்து நம் இதயத்தின் வாயிதழ் திறந்து ஊட்டுகின்ற அமிழ்தமே திருக்குறள்!
ஒன்றுக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறட்பாக்களுக்கோ பதவுரை, விரிவுரை என்று எழுதிக் கொண்டிராமல், பலரும் விரும்பிப் படிக்கத் தக்க வண்ணம் அவர்களைக் கவர்ந்திழுத்துக் கருத்துக்களை நெஞ்சத்தில் பதிய வைத்திட வேண்டுமென்ற ஆசைத் துடிப்பு, எனக்கு முப்பது ஆண்டுக் காலமாகவே உண்டு.
முதல் முயற்சியை 1956-ஆம் ஆண்டு தொடங்கினேன். ‘முரசொலி’ வார இதழில் ‘குறளோவியம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிடத் துணிந்தேன்.
இந்த நூலில் முன்னூறு குறளோவியங்கள் இடம் பெற்றுள்ளன. பயன் படுத்தப்பட்டுள்ள குறட்பாக்கள் 354 ஆகும்.
அறத்துப்பாலில் 76 குறட்பாக்கள், பொருட்பாலில் 137 குறட்பாக்கள், இன்பத்துப் பாலில் 141 குறட்பாக்கள்.
இந்த 354 குறட்பாக்களுக்கும் சொல்லோவியம் இயற்றிட, செழிப்பு மிகுந்த செந்தமிழ் எனக்குத் துணை நின்றுள்ளது என்பதை நூலுக்குள் நுழைந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
கவிதை நடையை உரைநடையிற் கலந்து, அதனைக் கரடுமுரடான கடுந்தமிழ்நடையாக்கிவிடாமல், எழில் கூட்டி எளிய நடையில் வழங்கிடும் புதிய நடையொன்றை 1945-ம் ஆண்டு நான் ஈரோடு “குடியரசு” அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் அரவணைப்பில் இருந்தபோதே அறிமுகப்படுத்தினேன்.